இந்தியாவில் கொரோனா வைரஸின் படம் முதல் முறையாக வெளியீடு..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. புனேயில் உள்ள வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் அறிவியலாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் மரணமடைந்துள்ள நிலையில், அங்கு பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மடிந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 834 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. புனேயில் உள்ள வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் அறிவியலாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளனர்.
சீனாவின் வுஹான் நகருக்கு சென்று திரும்பிய கேரளாவைச் சேர்ந்த மாணவிக்குத்தான், நாட்டிலேயே முதல்முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம், கொரோனா வைரஸ் படம் பிடிக்கப்பட்டுள்ளன. சார்ஸ் - சிஓவி - 2 எனப்படும் இந்த வைரஸின் படங்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வைரஸின் தோற்றம், 2012 ஆம் ஆண்டில் பரவிய மெர்ஸ் சிஓவி வைரஸ், 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் சிஓவி வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் கிரீடம் போன்ற வெளித்தோற்றம் கொண்டது என்றும், கொரோனா என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என பொருள் என்றும் அவர்கள் கூறினர்.