“18 ஆண்டுகளில் என் முதல் விடுமுறை இது” - ‘மேன் Vs வைல்ட்’ மோடி
கடந்த 18 ஆண்டுகளில் நான் எடுத்துள்ள முதல் விடுமுறை இதுதான் என ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தெரிவித்தார்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்த ஆண்டுகளில் இதுதான் தனது முதல் விடுமுறை எனத் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக முழுவதும் என்னையே அர்ப்பணித்துள்ளேன். இதுவே எனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார். பிரதமராக உங்களின் விருப்பம் என்ன என்ற கிரில்ஸின் கேள்விக்கும் பிரதமர் மோடி பதில் அளித்தார். அதாவது, “ நான் பிரதமர் என்றெல்லாம் ஒருபோதும் நினைப்பதில்லை. எனக்காக பணிகள் என்னவோ..? எதை செய்ய வேண்டுமோ அதனைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். அதுவே என் கடமை” என தெரிவித்தார்.