புனே: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து... 12 ஊழியர்கள் மீட்பு
மகாராஷ்டிரா மாநிலம் புனே - சோலாபூர் சாலையில் ஒரு ரசாயன உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகரிலிருந்து சுமார் 80 கிமீ தூரத்தில் உள்ள தொழில்துறை மேம்பாட்டுக் கழகப் பகுதியில் அமைந்துள்ளது ஷிவ் சக்தி ஆக்ஸலேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். ரசாயன கரைப்பான் உற்பத்தி நிறுவனமான இங்கு இரவு 1.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்துவந்த வீரர்கள், 12 ஊழியர்கள், இரண்டு நாய்கள் மற்றும் அங்கிருந்த சில வாகனங்களையும் மீட்டுள்ளனர். ரசாயன கரைப்பான் நிறைத்து வைத்திருந்த கொள்கலன்கள் திடீரென வெடித்ததில் விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் மடமடவென தீ பரவியதாக தீயணைப்பு அதிகாரி சுதிர் கண்டேகர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை வரை போராடிய வீரர்கள், 8 முதல் 9 டேங்க் தண்ணீரைப் பயன்படுத்தி பற்றியெரிந்த தீயை ஒருவழியாக அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒருவருக்குக்கூட காயம் ஏற்படவில்லை. அந்த இடத்தின் வெப்பத்தைக் குறைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுதிர் தெரிவித்துள்ளார்.