டெல்லியில், மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள லோக் நாயக் பவன் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லி துக்ளக் சாலையில் அமைந்துள்ளது லோக் நாயக் பவன். இந்த கட்டடத்தில் பல்வேறு மத்திய அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இன்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, கட்டடத்தின் 4-ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.
ஒரு பகுதியில் பிடித்த தீ கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 25 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தீ எரிந்ததால் அரசுத் துறை அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள் கருகி சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.