திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோயிலை ஓட்டி அமைந்துள்ள இந்த மையத்தில் ஊழியர்கள் வழக்கம்போல லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் அறையில் இருந்த புகைப்போக்கியில் இருந்து தீ பரவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் இரு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புகைப் போக்கியில் அடர்த்தியாக படிந்திருந்த நெய் திட்டுகளில் அனல் பரவியதே விபத்து ஏற்பட காரணம் என திருமலை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடராமி ரெட்டி தெரிவித்தார். விபத்து காரணமாக சிறிது நேரம் தடைப்பட்ட லட்டு தயாரிக்கும் பணிகள், பின்னர் மீண்டும் தொடங்கியது. தீ பரவியதில் 80 லிட்டர் நெய் சேதமடைந்ததாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர்.