தீ விபத்தில் கருகிய 25 உயிர்கள்.. மத்தியப் பிரதேசத்தில் சோகம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ளது பாதான் கிராமம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் மளமளவென தீ வேகமாக பரவியது. இதில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 25 பேர் தீயில் கருகி பரிபாதமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இருப்பினும் எரியும் பீடியை சரியாக அணைக்காமல் யாரோ ஒருவர் போட்டுச் சென்றது கூட, தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஒருசிலர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான தொகையை அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளார்.