
ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் 203 பேர் மீது உத்தரபிரதேச போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் மீது உத்தரபிரதேச போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக ஹத்ராஸ் செல்லாமல் தடுக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். பிறகு அவர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை, முகக் கவசம் அணியவில்லை என பெருந்தோற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சட்டப்பிரிவுகள் 188,269,270 கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன, இதில் 153 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, 50 நபர்களின் பெயர்கள் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே ராகுல், பிரியங்கா ஆகியோர் தடுக்கப்பட்ட சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், உரிய பதிலை தாக்கல் செய்யும்படி உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர், இதன்பின் காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல்காந்தி கீழே விழுந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.