கொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. பல நாடுகளில் முதல்கட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அனைத்தும் சோதனையில் உள்ளன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் பல கொரோனாவுக்கான மருந்துகளும் சோதனைக் கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் சில சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத தயாரிப்புகள் மூலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்து வருகின்றனர். எந்தவித மருந்தாக இருந்தாலும் ஆயுஷ் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதன்பின்னரே பயன்பாட்டுக்கு வர வேண்டுமென அரசு கூறியுள்ளது. இந்நிலையில் அனுமதி பெறாமலேயே மருந்து கண்டுபிடித்ததாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கொரோனா மருந்து தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டு கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு அந்த மருந்தை பயன்படுத்தியதாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பல்பீர் மற்றும் சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மற்றும் நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
முன்னதாக கொரோனா மருந்துக்கான சோதனைகளை அனுமதியின்றி செய்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.