மாநிலங்களுக்கு கடன், ஊழியர்களுக்கு முன்பணம் : நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக இன்று பத்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், நுகர்வோரின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் ஏதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி எனப்படும் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வட்டியின்றி ரூ.10,000 வழங்கப்படவுள்ளதாகவும், இந்த தொகை ஊழியர்களின் மாத சம்பளத்தில் ரூ.1000 தவணையாக பெறப்படும் என்றும் குறிப்பிட்டார். அதேசமயம் இந்த முன் பணத்தை மார்ச் 2021ஆம் ஆண்டுக்குள் மட்டுமே செலவழிக்க முடியும் என்றார். மேலும், இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 6வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக 50 ஆண்டுகால வட்டியில்லா கடனாக ரூ.1,600 கோடி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். இதேபோன்று உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.900 கோடி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இந்த தொகைகளும் மார்ச் 2021ஆம் ஆண்டுக்குள் செலவிடப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். இதுதவிர மற்ற மாநிலங்களுக்கு அவற்றின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப ரூ.7,500 கோடி கடன் வழங்கப்படும் என்றார்.