55 பக்க வெள்ளை அறிக்கை: மன்மோகன் சிங் அரசின் பொருளாதார நிலையை கடுமையாக விமர்சித்த நிதியமைச்சர்!

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து மன்மோகன் சிங் அரசை விமர்சித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
FM Nirmala sitharaman, Manmohan singh
FM Nirmala sitharaman, Manmohan singhPT

இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 55 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

நிர்மலா சீத்தாராமன்
நிர்மலா சீத்தாராமன்

2004 ஆம் வருடம் முதல் 2014 ஆம் வருடம் வரை நடைபெற்ற மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பொருளாதார சூழல் எப்படி இருந்தது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக , நிர்மலா சீத்தாராமன் அளித்த வெள்ளை அறிக்கை அமைந்திருந்தது.

இந்திய பொருளாதாரம் பெருத்த சங்கடத்திலும் சிக்கலிலும் இருந்தசமயம், 2014 ஆம் வருடத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த போது பொருளாதார சூழல் எப்படி இருந்தது என்பதை இந்த வெள்ளை அறிக்கை சுட்டிகாட்டியது.

இது குறித்து வெள்ளை அறிக்கையை படித்துக்காட்டிய நிர்மலா சீதாராமன், “மன்மோகன் ஆட்சி காலத்தில் மிகவும் மோசமான சூழலில் இந்திய பொருளாதாரம் இருந்தது. தொடர்ந்து 5 வருடங்களாக இரட்டை இலக்க பணவீக்கம் இருந்தது. முதலீடுகள் மிகவும் குறைந்திருந்தன. வாராக்கடன் மிகவும் அதிகமாக இருந்தது. இதன் காரணத்தால் அரசின் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில்தான் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தது பிறகு நாங்கள் இந்த பிரச்சனைகளை படிப்படியாக சரி செய்து இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் முக்கியமாக மன்மோகன் சிங் அரசு காலத்தில் 2ஜி ஊழல் நடைபெற்றது என்பதை வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். இதைத் தவிர நிலக்கரி ஊழல் விவகாரத்தையும், காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்த போது அதில் நடந்த ஊழல் பற்றியும் , மின்சார தட்டுப்பாடு குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

”தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கு அஞ்சி இந்தியாவை விட்டு வெளியே செல்லலாமா என்று வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்த காலமாக இருந்தது, இதைத் தவிர தங்கத்தை இறக்குமதி செய்ய ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது ” என்று பல்வேறு பிரச்சனைகளை வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியதுடன், ”இத்தகைய பிரச்சனைகளை பாஜக ஆட்சியில் சரி செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

”தற்பொழுது இந்தியாவில் 620 மில்லியன் டாலர் அன்னிய செலாவணி இருக்கிறது. இதற்கு காரணம் அடுத்த பத்து வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சி பாதை கொண்டு வந்து இருக்கிறோம் வலுவான பாதையில் தற்போது இந்தியா இருக்கிறது”

கொள்கைகள் ரீதியாக முடிவுகள் எட்டப்படாமல் மன்மோகன் அரசு திணறிக்கொண்டு இருந்தது. ஆனால் நரேந்திர மோடி வேகமான வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரத்தை கொண்டு வந்து உள்ளார்” என்றும் மிகவும் கடும் விமர்சனத்தை அடங்கிய வெள்ளை அறிக்கையாக இது அமைந்திருந்தது.

இதற்கு முன்னதாக இன்று காலை காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை வெளியிட்டது.

அதில் நரேந்திர மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி அதிகரிப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு என்று பல்வேறு விஷயங்களை காங்கிரஸ், பாஜவிற்கு எதிராக குறிப்பிட்டு இருந்தனர். ஆகவே ஒரே நாளில் இரண்டு அறிக்கைகள் என காங்கிரஸ் மற்றும் பாஜக போட்டியில் களம் இறங்கினர்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி , பதவியிலிருந்து ஓய்வு பெறும் மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கு பிரியா விடை அளித்தார். மன்மோகன்சிங் அவரது பதவி காலம் முடிந்து ஓய்வு பெற இருக்கிறார் என்பதால் அவரைப் பற்றி மோடி பேசும்பொழுது, மன்மோகன்சிங் சிறப்பாக பணியாற்றினார் என்றும் உடல்நல குறைவாக இருந்தபோது கூட சக்கர நாற்காலிகள் வந்து மாநிலங்களவையில் வாக்களித்தார் எனவும்மோடி நினைவு கூர்ந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com