‘அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது’-நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் சொன்ன காரணம்!

‘அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது’-நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் சொன்ன காரணம்!
‘அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது’-நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் சொன்ன காரணம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்று அதானி கடன் விவகாரத்தில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தினரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் அமர்வு முழுவதும் அதானி குழும விவரம் ஓங்கி ஒலித்தது. அதாவது, அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக கூறி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் மிகப்பெரிய விவாத பொருளானது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதனால், பாதி நாட்களுக்கு மேல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் முடங்கியது. 

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய இன்று இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார். 

மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், 2022 டிசம்பர் 31-ம் தேதி வரை அதானி குழுமத்திற்கு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள கடன் விவரங்கள் தொடர்பாகவும், நடப்பு ஆண்டில் அதானி குழுமத்தின் நிகர லாபம், கடன் விவரம் உள்ளிட்டவை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பேங்க் ஆஃப் இந்தியா 1934, இந்திய ரிசர்வ் வங்கி 45-இ விதியின் படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பதால் அதானி குழுமம் கடன் விவகாரங்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட வங்கியால் இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் ரகசியம் காக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும், எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு செய்த மொத்த கடன் தொகை 31.12.2022 அன்று 6,347.32 கோடியாக இருந்த நிலையில், 05.03.2023 அன்று 6,182.64 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com