கனிமொழி எம்பி Vs அமைச்சர் நிர்மலா சீதாராமன்- நாடாளுமன்ற காரசார விவாதத்தின் பின்னணி இதுதான்

கனிமொழி எம்பி Vs அமைச்சர் நிர்மலா சீதாராமன்- நாடாளுமன்ற காரசார விவாதத்தின் பின்னணி இதுதான்
கனிமொழி எம்பி Vs அமைச்சர் நிர்மலா சீதாராமன்- நாடாளுமன்ற காரசார விவாதத்தின் பின்னணி இதுதான்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பதிலளித்தார். காரசார விவாதமாக இது அமைந்திருந்தது. அதனொரு சிறு பகுதி இங்கே:

எம்.பி. கனிமொழி, மத்திய அமைச்சரவையை நோக்கி எழுப்பிய கேள்விகள்:

`ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. 2014-ம் ஆண்டு வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71, டீசல் விலை ரூ. 53, எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 414 என்றே இருந்தது. ஆனால் இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து ரூ. 1,200 வரை விற்பனை ஆகிறது. பெட்ரோலும் லிட்டருக்கு ரூ. 100ஐ தாண்டி விட்டது. டீசல் விலை ரூ. 100ஐ நெருங்குகிறது மாதம் ரூ. 30,000 சம்பாதிக்கக் கூடிய குடும்பத்தில் ரூ. 15,000-ஐ பெட்ரோல், டீசல், எல்பிஜிக்காக செலவழிக்க வேண்டும் என்றால், அந்த குடும்பத்தால் எப்படி வாழ முடியும்?

பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் தூபே பேசும்போது நாட்டில் வெங்காயம் விலை குறைந்து விட்டது, தக்காளி விலை குறைந்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார். இந்த இரண்டையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் மூன்று வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா? ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவேளைக்கு ஒரே ஒரு உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை வாங்கக் கூட முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

பிரச்னைகள் எழுகையில் அரசோ `தேவைப்படும் மக்களுக்கு மானியத்தில் சிலிண்டர் தருகிறோம்' என்று சொல்கிறது. இதற்காக, `பணம் இருப்பவர்கள் தங்களுடைய மானிய உரிமையை விட்டுக் கொடுங்கள்’ என்று கூறினீர்கள். உங்களுடைய வாக்கை நம்பிக்கொண்டு பலரும் மானியத்தை விட்டுக் கொடுத்தனர். ஆனால், இன்று பலருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் வந்து சேர வேண்டிய சிலிண்டர் மானியம் கூட முறையாக சென்று சேர்வதில்லை. இதனால் மானிய உரிமையை கோரியவர்களும் அவதிப்படுகின்றனர், மானிய உரிமையை விட்டுக்கொடுத்தோரின் எண்ணமும் வீணாகிறது.

இப்படி ஒருபுறம் விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. அதை குறைக்கவும் அரசிடம் வழி இல்லை. குறிப்பாக வருமானத்தை அதிகரிக்க வழியே கிடைப்பதில்லை. இப்படியாக உணவுப்பொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்லும் வேளையில் அதைக் குறைக்க எதுவும் செய்யாமல் இருப்பதால் இந்த மக்கள் எப்படி வாழ்வார்கள் என்பதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு கடன் கொடுக்க இந்திய ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்று பாஜக உறுப்பினர் கூறினார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு முதலில் ஒன்றிய அரசு (மத்திய அரசு) தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். நீங்கள் எங்களுக்கு வேறு எந்த கடனையும் தர வேண்டாம். எங்கள் நிதியைக் கொண்டே எங்களால் வளமான மாநிலத்தை வழங்க முடியும்” என்று கனிமொழி கூறினார்.

எம்.பி. கனிமொழி கேட்ட கேள்விகளை கீழ்க்காணும் வீடியோவில் முழுமையாக காணலாம்:

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர், பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்பதாக திமுக வாக்குறுதியளித்தது. அதேபோல டீசலுக்கு ரூ.4 குறைப்பதாகவும் திமுக வாக்குறுதி தந்தது. எல்பிஜி சிலிண்டருக்கு மானியம் தருவதாகவும் உறுதியளித்தது. ஆனால் இப்போது அதுபற்றி கேட்டால், `எப்போது குறைப்போம் என சொல்லவில்லை’ என்கிறார் திமுக அமைச்சர். இப்போது ஆனால் அவையில் வைத்து, நாங்கள் தான் அடாவடித்தனமாக நடப்பதாக கூறுகின்றனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை கிட்டத்தட்ட இரண்டு முறை குறைத்து விட்டது. ஆனால், உங்களுடைய அரசாங்கம் (திமுக அரசு) மாநிலத்தில் ஏன் விலையைக் குறைக்கவில்லை?

பால் விலையை அதிகரித்த விஷயத்திலும்கூட, பிராண்ட்டட் பால் வகை மீதான வரியைத்தான் கூட்டியிருந்தோம். இதுபற்றி ஜிஎஸ்டி கூட்டத்தில் தெளிவாக முடிவுசெய்யப்பட்டது. அதன்படி `பிராண்ட்டட் ஐட்டங்கள் மீது மட்டும்தான் வரி போட வேண்டும்’ என்பதே ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு. அந்தக் கூட்டத்தில் (மத்திய அரசின் ஜிஎஸ்டி கூட்டத்தில்) தமிழக நிதி அமைச்சரும்தான் இருந்தார். இது தெரிந்த பின்னரும் தமிழகத்தில் விலை உயர்த்தப்பட்டது எனில், அதை உயர்த்தியது நானோ பிரதமரோ கிடையாது.

ஜிஎஸ்டி குழுவின் முடிவின்படி 100 ரூபாய் தயிரின் விலை என்றால், அதற்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் (ரூ.105 என விற்கலாம்) என சொல்லப்பட்டுள்ளது. 5% ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக கூடுதலாக விலை நிர்ணயம் செய்வது ஏன் (இப்போது ரூ.120க்கு விற்கப்படுகிறது)? ஆக, ஜிஎஸ்டி வரிக்கும் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து தமிழகத்தில் விற்கப்படுகின்றன. அப்படியிருக்க ஜிஎஸ்டி குழு மீது பழியை போடுவது ஏன்? மக்கள் மீது திமுக அரசுதான் பாரத்தை சுமத்துகிறது.

இதேபோல மோர் - லஸ்ஸி மீதும் அதிக தொகை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு இதை செய்துவிட்டு ஜிஎஸ்டி மீது பழி போட்டு விட்டு நீங்கள் மக்களிடம் அதிக விலைக்கு விற்கிறீர்கள், பாரத்தை சுமத்துகிறீர்கள். விலையை உயர்த்தியதற்காக ஜிஎஸ்டியை காரணம் காட்டும் நீங்கள், பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விதிக்கிறீர்கள். ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது.

அமைச்சர் நிர்மலா சீதாரமன் கூறிய பதில்களை கீழ்க்காணும் வீடியோவில் முழுமையாக காணலாம்:

அதில் அங்கமாக இருப்பது உங்களுடைய அமைச்சரும்தான். அவரும்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஏகமனதாக எல்லோரும் ஒருமித்த அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. அதில் ஏழைகளை பாதிக்கக் கூடிய வகையில் எதுவும் செய்யவில்லை. மாறாக நீங்கள்தான் ஜிஎஸ்டி நிர்ணயித்த வரியை விட அதிக வரியை போட்டிருக்கிறீர்கள்” என்றார்.

இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநப்பு செய்தனர். பதிலுரையில், பல இடங்களில் அமைச்சர் நிர்மலா சீதாரமன், தமிழில் பதில் உரைத்திருந்ததும் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக அவர் இந்தியில் பதிலுரைக்க முயன்றபோது எம்பி கனிமொழி குறுக்கிட்டு `ஒன்று தமிழில் பதிலுரையுங்கள். அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள்’ என்றார். இதைத்தொடர்ந்து அவர் தமிழில் உரையாற்றினார். காரசார விவாதங்களால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com