ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை
Published on

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆர்பிஐ அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகித்த பியுஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பாக கருதப்பட்ட ஒரு விஷயம் மாத சம்பளம் பெறுவோரின் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்பதுதான். இந்நிலையில் தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருமானத்தில் நிரந்தர கழிவு வரம்பு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சில வருமான வரி சலுகைகள் அறிவித்த நிதியமைச்சர் அதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிட்டு தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ‌விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றாட வருமானத்தை சார்ந்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மாதம் ‌100 ரூபாய் செலுத்தினால் 60 வயதிற்கு பிறகு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவர். பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண உதவி 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் 5‌ சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசுக்கு இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com