பெரு நிறுவனங்களுக்கு விதிகள் தளர்வு... அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானலும் நன்கொடை வழங்கலாம்
அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை கொடுக்கும் விதத்தில் உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதற்காக இந்திய நிறுவனங்கள் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.
நிதி மசோதா 2017 மக்களவையில் மார்ச் 22-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதில் பெருநிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் தாக்கல் செய்யும் வருடாந்திர லாப நஷ்டக் கணக்கில் எந்த அரசியல் கட்சிகளுக்குக் நிதி கொடுத்தன என்று குறிப்பிட வேண்டியதில்லை என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த 3 நிதி ஆண்டுகளின் சராசரி லாபத் தொகையில் 7.5 சதவீதத்திற்கு மேல் ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளிக்க முடியாது. இந்த உச்ச வரம்பையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்காக இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013-லும் திருத்தங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
இவ்விரண்டு சட்டங்களின் படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடையாக கொடுக்கலாம். எந்த அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கப்பட்டது என்பதை அந்த கார்ப்பரேட் நிறுவனம் பங்குதாரர்களிடமும் சொல்ல தேவையில்லை.
இது குறித்து, மத்திய அரசின் தணிக்கைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, இது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதை அதிகரிக்கும் என்று கூறினார்.
பாஜக கட்சி அரசியல் கட்சிகளின் நன்கொடைகளிலும், வருமானத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வாதாடி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.