பெண் உதவி இயக்குனருக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் கைது!
பெண் உதவி இயக்குனரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்தித் திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
சினிமாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதமாக இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த இந்திப்பட இயக்குனர் அவர். வயது 34. இவரிடம் உதவி இயக்குனராக 29 வயது பெண் ஒருவர் பணியாற்றினார். சமீபத்தில் படம் இயக்காமல் இருந்த இயக்குனர், மீண்டும் படம் இயக்குவதாகக் கூறி பெண் உதவி இயக்குனரை மும்பையில் உள்ள மாஹிம் ரயில்வே நிலையம் அருகே நிற்கச் சொன்னார். அங்கு, அடுத்த படத்தில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சொன்னார்.
இதை நம்பி மாஹிம் வந்தார். இயக்குனர் அங்கு வந்ததும் மது பார் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் பெண் உதவி இயக்குனரை. அங்கு மது அருந்திய இயக்குனர், பின்னர் காரில் ஏறினார். மாஹிம் ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட சொன்னார் உதவி இயக்குனர். ‘ம்ஹும். வீட்டில்தான் விடுவேன்’ என்று அடம்பிடித்த இயக்குனர், சொன்னபடி அவர் வீட்டுக்கு சென்றார். சென்றதும் தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்தார்.
திடீரென்று பெண் உதவி இயக்குனரின் ஆடைகளை பலவந்தமாகக் கழற்றத் தொடங்கினார். கத்தினார் பெ.உ.இ. ’என் ஆசைக்கு இணங்க வில்லை என்றால் சினிமாவில் யாரிடமும் நீ பணியாற்ற முடியாது’ என்று மிரட்டினார் இயக்குனர். பின்னர் அவரை அதிகமாக காதலிப்பதாகவும் தன்னிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் குழைந்தார். அவர் சம்மதிக்கவில்லை. தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார். இதனால் அப்செட்டான அந்த இயக்குனர் போதையில் அங்கேயே தூங்கிவிட்டார். இந்த சம்பவம் பற்றி அந்த இயக்குனரின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார் பெ.உ.இ. அவர்கள் இயக்குனருக்கு போன் பண்ணி கேட்டதும் பதறிவிட்டார். பின்னர் ‘நான் இங்கு நடந்துகொண்டது பற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் பற்றி மாஹிம் போலீசில் புகார் கொடுத்தார் அந்த பெ.உ.இ. பின்னர் அந்த இயக்குனரை போலீசார் கைது செய்தனர். அந்த இயக்குனர் மற்றும் பெண் உதவி இயக்குனர் பெயர்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.