திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை.. பக்தர்கள் உற்சாகம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று நடைபெற உள்ளது. கருடசேவை நடைபெறுவதையொட்டி பூக்களாலும் மின் விளக்கு அலங்காரங்களாலும் ஏழுமலையான் கோவில் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.
பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பண்டிதர்கள் வேதம் ஓத, அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி திருமஞ்சன சேவை செய்தனர். நேற்று இரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Read Also -> சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து
சுவாமி வீதி உலாவின் போது நான்கு மாட வீதியில் திரண்டு இருந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டமும், பஜனைகளும், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து கிளியுடன் கூடிய மாலை திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின்னர் வழங்கப்பட்டது. இதேபோன்று, சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் அனுப்பப்பட்ட திருக்குடைகளும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தடைந்தன. இன்று நடைபெறும் கருட சேவையை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டுள்ளனர்.

