மருமகனுக்கு 379 உணவு வகைகளைப் பரிமாறிய மாமனார்! எதற்காக தெரியுமா?

மருமகனுக்கு 379 உணவு வகைகளைப் பரிமாறிய மாமனார்! எதற்காக தெரியுமா?
மருமகனுக்கு 379 உணவு வகைகளைப் பரிமாறிய மாமனார்! எதற்காக தெரியுமா?

திருமணத்துக்குப் பின்னான முதல் சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் புதுமாப்பிள்ளை ஒருவருக்கு 379 உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களுக்குக் கொண்டாட்டம்தான். இது, உழவுத்தொழிலை மதிக்கும் தினம் என்பதால் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புதிதாய்த் திருமணமான தம்பதியர்கள் ‘தலை தீபாவளி / பொங்கல்’ கொண்டாடி மகிழ்வரோ அப்படி அங்கும் கொண்டாடுவர். பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளின்போது தம்பதியருக்கு பல்வேறு வகையான உணவுகளில் விருந்து வைத்து, நகைகளும் பரிசளிக்கப்படும். இந்த உணவு விருந்து கலாசாரத்தில் மணமக்களை ஆச்சர்யப்படுத்துவதில் பிற மாநிலங்களைவிட, ஆந்திர மக்கள் தான் அட்டகாசமாக வேலை செய்வர் என்றால் மிகையாகாது.

நம்ம ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை போல, ஆந்திராவில் உழவை கொண்டாட சங்கராந்தி என்ற தினம் கொண்டாடப்படுகிறது. இரு பண்டிகைகளும் கிட்டத்தட்ட ஒரேநாளில் தான் வரும். இவ்வருடம் இந்நாளில், திருமணத்துக்கு பின் முதல் சங்கராந்தியை கொண்டாடிய தன் மருமகனுக்கு மிகப் பிரமாண்டமாக விருந்து வைத்து அசத்தியுள்ளார் ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழிலதிபர். அதுதான் இப்போது பேசுபொருளாக உள்ளது. அப்படி என்ன செய்தார் அவர்?

சங்கராந்தி பண்டிகையன்று எலுரு நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் என்பவர், தன் மகளையும் மருமகனையும் வரவழைத்து, அவர்களுக்கு 379 வகைகளில் உணவுகள் பரிமாறி மிகப்பெரிய விருந்து வைத்துள்ளார். பீமாராவ், விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியைச் சேர்ந்த கட்டடக் கலைஞரான புத்தா முரளிதருக்கு, தன் மகள் குஷ்மாவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

அவர்களுடைய `தலை சங்கராந்தியை’ முன்னிட்டு மாமனார் பீமாராவ், முரளிதருக்கு 379 உணவுகளைப் பரிமாறி தி(கை)ளைக்க வைத்துள்ளார். அந்த உணவுகளில், 10 சதவீதத்தைக்கூட முரளிதர் சாப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும்கூட, இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதேபோன்று, கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் விருந்து வைத்திருந்தார். அதை முறியடிக்கும் வகையிலேயே பீமாராவ் 379 வகைகளில் விருந்து வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த விருந்தில், 30 வகையான கறிகள், சாதம், புளிஹோரா, பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள், சூடான மற்றும் குளிர்பானங்கள், பிஸ்கட், பழங்கள், கேக்குகள் ஆகியன வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து முரளிதரின் மனைவி குஷ்மா, “சங்கராந்தியை முன்னிட்டு என் கணவருக்கு அனைத்து வகையான உணவு வகைகளையும் வழங்க திட்டமிட்டோம். இதற்கான மெனுவை, கடந்த 10 நாட்களாக எனது பெற்றோர்கள் தயார் செய்தனர். 379 வகையான உணவு வகைகளையும் பார்த்த என் கணவர் அதிர்ச்சியடைந்தார்” எனத் தெரிவித்துள்ளார். குஷ்மாவின் கணவர் முரளிதர், “நான் எல்லா பொருட்களையும் ருசித்தேன், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருந்தது. கோனாசீமா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் இக்கலாச்சாரம் மிகவும் புகழ் பெற்று வருகிறது” என்றுள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com