டெல்லி | நண்பர்களுடன் நடனம் ஆடிய மணமகன்.. திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை!
திருமணம் என்பது ஓர் அழகான நிகழ்வு. அதை அற்புத நினைவாக மாற்ற ஆடம்பரம் என்ற பெயரில் ஒருசில கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்தவகையில் இன்றைய திருமண விழாக்களில் மண்டபம், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.
சில திருமண விழாக்களில் இடம்பெறும் ஆடல் பாடல் நிகழ்வின்போது மணமக்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து ஆடுகின்றனர். அப்படியொரு சம்பவத்தால் டெல்லியில் ஒரு திருமணமே நின்றுபோயிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
டெல்லியில் ஒரு ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அப்போது மேடையில் நின்றிருந்த மணமகனை, அவரது நண்பர்கள் ’சோலி கே பீச்சே க்யா ஹை’ என்ற பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அவரும், நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நடனம் ஆடியுள்ளார். இந்தச் செயல் மணமகளின் தந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர், அந்த திருமணத்தையே நிறுத்தியுள்ளார்.
“மணமகனின் இந்தச் செயல் எனது குடும்பத்தின் மதிப்பை அவமதிப்பதாக இருக்கிறது” எனக் கூறி தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். இதுகுறித்து மணமகன், அவரிடம் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவருடன் சென்ற மணமகளும் கண்ணீர் விட்டப்படியே சென்றுள்ளார்.
நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடியதற்காக, மணமகனின் திருமணம் நின்றுபோன செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன. பயனர் ஒருவர், “மாமனார் சரியான முடிவை எடுத்தார். இல்லையெனில், அவர் இந்த நடனத்தை தினமும் பார்க்க வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.