மகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை ! ஜெய்பூரில் ஒரு 'கனா'

மகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை ! ஜெய்பூரில் ஒரு 'கனா'
மகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை ! ஜெய்பூரில் ஒரு 'கனா'

கிரிக்கெட் பயிற்சி அளிக்க அகாடமி ஏளனமாக பார்த்தது என்ற காரணத்திற்காக தனது மகளுக்கு தந்தை ஒருவர் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கிய நெகிழ்ச்சி சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளது.

ஒலிம்பிக்கின் துப்பாக்கிச் சூடும் போட்டியில் இந்திய வீரர் அபிநாவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். அதற்கு காரணம் அவரது தந்தை தான். ஏனென்றால் அபிநாவ் பயிற்சி எடுப்பதற்காக ஒரு சூட்டிங் பயிற்சி தளத்தையே அவரது தந்தை ஏற்படுத்திக் கொடுத்தார். சூட்டிங் பயிற்சி தளம் கூட அமைப்பது சாத்தியமானது எனத் தோனலாம், ஆனால் இங்கு ஒரு தந்தை தனது மகளுக்காக கிரிக்கெட் மைதானத்தையே உருவாக்கியுள்ளார். இதிலென்ன இருக்கு, பணக்கார வியாபாரியாக இருப்பார் போல என நினைக்காதீர்கள். இந்த தந்தை மத்திய அரசின் சர்வே துறையில் பணிபுரியும் ஒரு சாதாரண கிளார்க் தான். தனது மகளுக்காக கிரிக்கெட் மைதானம் அமைக்க அவர் தனது சொத்தை விற்றதுடன், கூடுதலாக கடனும் வாங்கி ரூ. 22 லட்சம் கொடுத்து கடந்த 2010ஆம் ஜெய்பூரில் புறநகர் பகுதியில் ஒரு மைதானத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் அவரது மகள் நியூஸிலாந்திற்கு எதிராக விளையாடவுள்ள இந்தியா மகளிர் அணியின் சர்வதேச டி20 போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் வளர்ந்தவர் பிரியா புனிதா. ஆனால் அவரது பூர்விகம் ராஜஸ்தான். இவரது தந்தை சுரேந்திரா மத்திய அரசில் கிளார்க்காக பணிபுரிகிறார். சிறுவயதில் பேட்மிண்டன் விளையாடி வந்த பிரியா, ஒருகட்டத்தில் அந்த விளையாட்டில் தனக்கு ஆர்வமில்லை என்பதை தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது மகள் விருப்பப்படி கிரிக்கெட் விளையாட சுரேந்திரா அனுமதி அளித்துள்ளார். பின்னர் டெல்லி உள்ளூர் போட்டிகளின் விளையாடிய பிரியா குறுகிய காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மகளின் விளையாட்டைக் கண்ட தந்தை அவரை கிரிக்கெட் அகாடமி ஒன்றிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அந்த அகாடமியின் பயிற்சியாளர் பிரியாவை ஏளனமாக பார்த்துள்ளார். “இந்த பெண்ணால் ஒன்னும் செய்ய முடியாது” என பயிற்சியாளர் பிரியாவை அவமானப்படுத்தியுள்ளார். இதனால் பிரியா அந்த அகாடயில் சேரமுடியவில்லை. இந்த சம்பவம் இந்திய அணியில் பிரியா விளையாடுவதை தடைப்படுத்தும் என எண்ணிய சுரேந்திரா, தனது மகளுக்காக ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். அதன்விளைவாக தான் ஜெய்பூரில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கினார்.

இதையடுத்து பிரியாவின் கிரிக்கெட் திறன் படிப்படியாக உயர ஆரம்பித்தது. குறிப்பாக 2015ஆம் ஆண்டிற்கு பிறகு பிரியா கிரிக்கெட் ஆர்வலர்கள் உட்பட அனைவரது கவனமும் பிரியா மீது திரும்பியது. தேசிய அளவிலான கிரிக்கெட்டில் 95 ரன்களை வெறும் 42 பந்துகளில் பிரியா விளாசினார். இதைத்தொடர்ந்து இந்திய ஏ அணியில் தேர்வான பிரியா, நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில், அவர்களின் சொந்த மண்ணிலேயே 59 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் மூன்றாவதாக களமிறங்கி, அவர் விளாசிய சிக்ஸர்கள் அனைவரையும் அசர வைத்தது. இதன் எதிரொலியாகவே தற்போது நியூஸிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரது கனவும், அவர் தந்தையின் கனவும் நினைவாகியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பிரியா, “நான் தொடக்கத்தில் ஏமாற்றமடைந்தேன். ஆனால் நான் நம்பிக்கையை விடவில்லை. ஒருநாள் கண்டிப்பாக நாம் தேர்வாகுவோம் என நம்பினேன். எனக்கான நேரம் கண்டிப்பாக வரும் என்பது தெரியும். தற்போது வந்துவிட்டது. என் தந்தை போல் எந்த தந்தையும் இருக்க முடியாது. நான் ஒருநாள் போட்டியில் தேர்வு செய்யப்படுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு தற்போது டி20 வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சர்வதேச போட்டியில் என்னால் முடிந்த வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” எனக்கூறினார்.  

சுரேந்திரா பேசும் போதும், “ஒருமுறை பிசிசிஐ அனுராக் தாகூர் கூறும் போது, ஹிமாச்சல பிரதேசத்தின் வலிமையான மனிதர் பிரியாவை இந்திய அணியில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாக என்னிடம் கூறினார். இதை நான் பிரியாவிடம் சொன்னபோது அவள் மவுனமாக இருந்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒருவரின் பரிந்துரையால் கிடைக்கும் வாய்ப்பு நமக்கு வேண்டாம் என்றால். அந்த அளவிற்கு அவளது விளையாட்டின் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது. கடந்த வாரம் அவள் டி20 போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் என்பதை அறிந்ததும் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியில் உரைந்து போனேன். தற்போது நான் எனது கனவில் வாழ்கிறேன்” என்று பூரிப்புடன் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com