சுங்கச்சாவடிகளில் கட்டாயம் ஃபாஸ்டேக் முறை - டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறையை நடைமுறைப்படுத்த வரும் டிசம்பர் 15 ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் மாற்றுவதே FASTag முறையாகும். இதனை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கிகளைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து FASTag ஸ்டிக்கரை பெற்ற பிறகு Google Play மூலம் FASTag செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த நடைமுறை டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து கட்டாயப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. சுங்கச்சாவடிகள், சில வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து FASTagஐ பெறலாம் என்றும் கூறி இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 15 வரை ஃபாஸ்டேக் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு போக்குவரத்து அமைச்சகம் தரப்பிலிருந்து செய்தி வெளியாகி உள்ளது.