விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டம்
மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் சிங்கு, டிக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழ்நிலையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. நண்பகல் முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண் குமார், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார். ரயில் நிலைய பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு படையைச் சேர்ந்த 20,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.