கர்நாடகத்தில் இன்று பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்!
கர்நாடகத்தில் இன்று நடக்கும் முழு அடைப்பையொட்டி, தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும், கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூரு பகுதிகளுக்கு நிரந்தர நீர்ப்பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா உள்பட சில கன்னட சங்கங்கள் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தன. இருந்தாலும், திட்டமிட்டப்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.
இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், ’மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். காலை 10 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக சென்று விதான சவுதாவை முற்றுகையிடுகிறோம். நாங்கள் நடத்தும் இந்த முழு அடைப்புக்கு பெரும்பாலான கன்னட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஸ், ஆட்டோக்கள் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். ஓட்டல்களை மூட வேண்டும். இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து இன்று காலை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. இதையடுத்து தமிழக பேருந்துகள், கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன.