6 மாதங்களை நிறைவு செய்தது விவசாயிகள் போராட்டம்: கருப்பு தினமாக அனுசரித்த தமிழக விவசாயிகள்

6 மாதங்களை நிறைவு செய்தது விவசாயிகள் போராட்டம்: கருப்பு தினமாக அனுசரித்த தமிழக விவசாயிகள்
6 மாதங்களை நிறைவு செய்தது விவசாயிகள் போராட்டம்: கருப்பு தினமாக அனுசரித்த தமிழக விவசாயிகள்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 6 மாதம் நிறைவடைந்ததையடுத்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு தினம் அனுசரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லை எல்லையை முற்றுகையிட்டு உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாபில் இருந்து டெல்லி செல்லும் சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ரயில் மறியல், ட்ராக்டர் பேரணி, செங்கோட்டை முற்றுகை என பலக்கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றினர். அதேபோல் டெல்லி செல்லும் டிக்ரி, காஸியாபாத், சிங்கு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். காஸியாபாத் எல்லையில் விவசாயிகள் திடீரென உருவப்பொம்மை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு விரைந்த காவல்துறையினர் விவசாயிகளை தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேபோல் பல இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் டெல்லிக்குள் விவசாயிகள் புகுந்துவிடாமல் இருக்க அங்கு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு தேசிய அளவில் 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மன்னார்குடியில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிடுமாறு வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அரகே பஞ்சநதிக்குளம் கிராமத்தில், கருப்பு பேட்ஜ் அணிந்து வயலில் இறங்கிய விவசாயிகள், கையில் கருப்பு கொடி ஏந்தி டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், விவசாய அமைப்புகள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி கருப்பு தின போராட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com