விவசாயிகள் போராட்டம்: 'ஸ்விகி'-யின் 'பதிலடி' ட்வீட்டுக்கு வரவேற்பும் எதிர்ப்பும்!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக 'ஸ்விகி' நிறுவனம் பதிவிட்ட ஒரு ரிப்ளை ட்வீட் நெட்டிசன்களிடையே வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
`டெல்லி சலோ' விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நவம்பர் 27-ம் தேதி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், தற்போது டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். டிசம்பர் மாதக் கடும் குளிரையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியை நடுங்கவைத்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது உணவு டெலிவரி நிறுவனமான 'ஸ்விகி'. நேற்று முன்தினம் ட்விட்டர் பயனாளர் ஒருவர், "விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எனது நண்பருடன் வாக்குவாதம் நடந்தது. அப்போது நாங்கள் உணவுக்காக விவசாயிகளைச் சார்ந்து இல்லை. நாங்கள் எப்போதும் ஸ்விகியிடமிருந்து உணவை ஆர்டர் செய்வோம் என்று அவர் கூறினார்" எனப் பதிவிடப்பட்டிருந்தது.
அந்த ட்வீட்டுக்கு ரெஸ்பான்ஸ் செய்த ஸ்விகி, "மன்னிக்கவும், எங்களால் கல்வியைத் திருப்பித் தர முடியாது" என்று, "விவசாயிகள் உணவுக்கு பங்களிக்கவில்லை என்று நம்புபவர்கள், கல்வி கற்கவில்லை" என்கிற தொனியில் அந்த ட்வீட் இருந்தது. ஸ்விகி நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான இந்த பதிலடிதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம். ஸ்விகி கொடுத்த பதிலுக்கு இதுவரை 7,800 ரீ-ட்வீட் மற்றும் 27,900 லைக்குகள் கிடைத்துள்ளது.
ஸ்விகி பதிலை அடுத்து சிலர் அந்த நிறுவனத்தை புறக்கணிக்க போவதாக பயமுறுத்தியுள்ளனர். ``நீங்கள், உங்கள் சொந்த வாடிக்கையாளர்களை அவமதிக்கிறீர்கள். இப்போது நீங்கள் அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டும். ஒரு பக்தர் கூட ஸ்விகியைப் பயன்படுத்த மாட்டார் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று ஒரு பயனர் பதிவிட்டு இருந்தார். ஏற்கெனவே மாட்டிறைச்சி விவாகரத்தில் ஜோமோட்டோவை புறக்கணித்து வருவதாக ஒரு தரப்பு சொல்லி வரும் நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனத்துக்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இதற்கிடையே, சில பயனர்கள் இதுபோன்ற சர்ச்சைகளிலிருந்து நிறுவனங்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ``ஜோமோட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் சர்ச்சையில் சிக்கி கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. ட்வீட் செய்யும்போது இந்த நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி டெலிவரி பாய்களுக்கான வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று சிலர் அட்வைஸ் செய்துள்ளனர். அதேவேளையில் பயனர்களின் இன்னொரு தரப்பினர் ஸ்விகியின் பதிலை வரவேற்று, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

