நள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்

நள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்
நள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்

டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் தடுத்துநிறுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நள்ளிரவில் டெல்லி செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

விவசாய விளைப்பொருட்களு‌க்கு உரிய விலை தரப்பட வேண்டும், கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத்தொகை தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாரில் இருந்து விவசாயிகள் பேரணி தொடங்கியது. அவர்கள் டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆயினும் தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டதால் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டம் கலைக்கப்பட்டது.

இதற்கிடையில் விவசாயிகள் போராட்டம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.‌ பின்னர் வேளாண்துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 10 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பழைய ட்ராக்டர்கள் மற்றும் வாகனங்களுக்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்படும், கிராமப்புறங்களில் பண்ணைத் தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வுகான அதில் உள்ள விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. எனினும், அரசு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் தங்‌கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர். மேலும் விவசாயிகள் அனைவரும் அப்பகுதியில் நள்ளிரவிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து டெல்லிக்கு செல்ல அனுமதியளித்து, தடுப்புகளை காவல்துறையினர் அகற்றியதால், விவசாயிகள் அனைவரும் ட்ராக்டர்கள் உள்ளிட்ட விவசாய வாகனங்களில் டெல்லி கிஷான் காட் பகுதிக்கு புறப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com