டெல்லி ஜந்தர் மந்தரில் 27வது நாளாக போராடிவரும் தமிழக விவசாயிகள், இன்று பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 27 வது நாளான இன்று பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரில், 3 பேருக்கு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அமைதி வழியில் போராட்டம் நடத்துமாறு, விவசாயிகளிடம் போலீசார் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று விவசாயிகள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.