’போலி ஆப்’ ஆல் பறிபோன ரூ.8 லட்சம் - விவசாயியின் உடனடி அதிரடி மூவும்.. மீட்கப்பட்ட பணமும்!

’போலி ஆப்’ ஆல் பறிபோன ரூ.8 லட்சம் - விவசாயியின் உடனடி அதிரடி மூவும்.. மீட்கப்பட்ட பணமும்!
’போலி ஆப்’ ஆல் பறிபோன ரூ.8 லட்சம் - விவசாயியின் உடனடி அதிரடி மூவும்.. மீட்கப்பட்ட பணமும்!

போலியான செயலியை இன்ஸ்டால் செய்ததால் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8,03,899 திருடப்பட்டு விட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரை சேர்ந்தவர் பவன் குமார் சோனி (55). விவசாயியான இவர், ஸ்ரீ கங்காநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் அவரது மகன் ஹர்ஷ் வர்தனிடம் (26) உள்ளது.  

இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி மாலை 3.45 மணியளவில்  ஹர்ஷ் வர்தனின் செல்போன் எண்ணுக்கு எஸ்பிஐ வங்கியிலிருந்து அனுப்பப்பட்டது போன்று ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், ''கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிக்காததால் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எங்களது செயலியை (App) பயன்படுத்தி கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்'' என அந்த எஸ்எம்எஸ் உடன் ஒரு ஆப் லிங்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான 'யோனோ' ஏற்கனவே அவரது செல்போனில் இருந்துள்ளது. ஆனால், அவர் அந்த எஸ்.எம்.எஸில் கொடுக்கப்பட்டிருந்த செயலியின் லிங்கை க்ளிக் செய்ததும் ஒரு புதிய ஆப் திறந்துள்ளது. அது போலியான செயலி என்பதை அறிந்திராத ஹர்ஷ் வர்தன் யூசர் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை அதில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து சில நொடிகளிலேயே அவரது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததற்கான மெசேஜ்கள் அடுத்தடுத்து வர ஆரம்பித்துள்ளன. 7 நிமிடங்களில் 8,03,899 ரூபாய் அந்த வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த போலியான செயலியால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார் ஹர்ஷ் வர்தன். அந்த பணம் அவரது தந்தை விவசாய நோக்கங்களுக்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் வாங்கிய கடனாகும்.

இதையடுத்து உடனடியாக ஊருக்கு விரைந்த ஹர்ஷ் வர்தன், தனது தந்தை பவன் குமார் சோனியை அழைத்துக்கொண்டு அவர் கணக்கு வைத்திருக்கும் ஸ்ரீ கங்காநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு சென்று மேலாளரிடம் ஆன்லைனில் பணம் திருடப்பட்ட சம்பவத்தை விளக்கி உள்ளார். இதையடுத்து வங்கி மேலாளர் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட PayU, CCAvenue, ஆக்சிஸ் வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பி, விவசாயி பவன் குமார் சோனியின் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தை முடக்கி வைக்குமாறு தெரியப்படுத்தி இருக்கிறார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சைபர்கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கும்படி வங்கி மேலாளர் பவன் குமார் சோனியை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அவர்  சைபர்கிரைம் காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் கூறியபடி ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் காலதாமதம் ஆனதால் பவன் குமார் சோனி காவல்துறை உயரதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்திற்கு உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பின்னரே மோசடி நடந்த 3 நாட்களுக்குப் பிறகு  எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சைபர்கிரைம் அதிகாரிகளின் முயற்சியால் முதலில் PayU வழியாக அனுப்பப்பட்ட ரூ.6,24,000 பணம் பவன் குமார் சோனியின் வங்கிக் கணக்கிற்கு திரும்ப வந்தது. அடுத்ததாக CCAvenue வழியாக எடுக்கப்பட்ட 1,54,899 ரூபாயில் 1,20,000 ரூபாயை கொல்கத்தாவில் உள்ள ஜியோ ஸ்டோரில் சில பொருட்களை வாங்குவதற்காக மோசடி செய்தவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதனால் வங்கிக் கணக்கில் இருந்து வெளியே சென்ற பணத்தை மீட்பது சவாலாக மாறியது. அதேபோல ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்பட்ட 25,000 ரூபாய் கொல்கத்தாவில் உள்ள ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிக் கணக்கில் இருந்து வெளியே சென்ற பணத்தை மீட்கும் முயற்சியில் சைபர்கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் மாற்றப்பட்ட மோசடி நபர்களின் வங்கிக் கணக்கை முதலிலேயே முடக்கியிருந்தால் பணத்தை எளிதாக மீட்டிருக்கலாம். ஆனால் வங்கிக் கணக்கை முடக்காததால் பணம் வெளியே சென்றுவிட்டது. சைபர்கிரைம் அதிகாரிகளின் அலட்சியத்தால் இது நடந்துள்ளதாக பவன் குமார் சோனி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com