ஆந்திரா : மயங்கி விழுந்து உயிரை விட்ட பெண் ; நான்கு பேருக்கு உயிர் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் அருகே உள்ள புரோதட்டுத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்பவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணவேணி மூளைச்சாவு அடைந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணவேணியின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் கிருஷ்ணவேணி உடலில் இருந்து இதயம், கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டது. இதில் இரண்டு சிறுநீரகங்கள் கர்னூல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இரண்டு பேருக்குப் பொருத்தப்பட்டது.
கல்லீரல், இதயம் அரசு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, திருப்பதியில் உள்ள சுவீமஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், அதேபோலப் பத்மாவதி இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நான்கு பெரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.