
அசாமின் கம்ரூப் மாவட்டத்தின் தக்கிங்கானை சேர்ந்தவர் ஜூன்மோனி ரபா, இவர் 2017-ம் ஆண்டு அசாம் காவல்துறையில் சேர்ந்தார். இவர் டிசம்பர் 2021-ம் ஆண்டு நாகோன் காவல்துறையில் சேர்க்கப்பட்டார். துணிச்சலான பல நடவடிக்கைகளை எடுப்பது, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிப்பது ஆகிய செயல்களின் மூலம் அசாம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். கடந்த வருடம் தன் வருங்கால கணவரை மோசடி குற்றச்சாட்டில் கைது செய்தார். இதன் மூலம் ரபா, இந்தியா முழுவதும் பிரபலமானார்.
மொரிகோலாங் போலீஸ் அவுட்போஸ்டின் எஸ்.ஐயாக பணியாற்றி வந்த ரபா, கடந்த 16-ம் தேதி நாகோன் மாவட்டத்தில் உள்ள சருபுகிய கிராமத்தின் வழியாக அதிகாலை காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், அவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். சீருடை இல்லாமல் சாதாரண உடையில் அவர் காரில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் அதிகாலை 2:30 மணிக்கு போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் உடனடியாக ரபாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரபா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ரபா மீது கண்டெய்னர் லாரியால் மோதிவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநர், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது விபத்து இல்லை, திட்டமிட்ட படுக்கொலை என ரபாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் மகளின் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள ரபாவின் தாயார் சுமித்ரா, “என் மகள் அதிரடியாக செயல்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தார். இதனால் அவரது செயல் பிடிக்காத யாரோதான் என் மகளை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
“அசாம் காவல்துறையின் ஆற்றல் மிக்க அதிகாரியாக இருந்தவர் ஜூன்மோனி ரபா. நாங்கள் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். இந்த விபத்து தொடர்பான விசாரணை சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரபாவின் விபத்து விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும்” என்று மாநில குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ ரபா, தன் வருங்கால கணவரை கைது செய்த மோசடி வழக்கில், பின்னாளில் இவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவரது இடைநீக்கம் நீக்கபட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். அதேபோல் ஜனவரி மாதம் 2022-ம் ஆண்டு பிபூரியா தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஆமிய குமாருடன், எஸ்.ஐ ரபா பேசும் தொலைபேசி ஆடியோ கசிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு நாட்டுப் படகுகளை இயக்கியதற்காக சில படகோட்டிகளை ரபா கைது செய்தார். தனது தொகுதி மக்களை துன்புறுத்தியதாக ரபா மீது புகார் கூறிய புயான், வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரையாடலும் வெளியாகி பரபரப்பை அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த வாரம் இரவு, ரபா வீட்டில் சோதனை நடைபெற்றது. அதில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது, ஆனால் அது ரபாவின் தாயார் சுமித்ராவுக்கு சொந்தமானது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதே வாரத்தில், எந்த காரணமும் இல்லாமல் தனது மகளை தாக்கியதாக ரபா மீது ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து தவறான சிறை, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வடக்கு லக்கிம்பூர் காவல்நிலையத்தில் ரபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு அடுத்த சில மணி நேரங்களிலேயே எஸ்.ஐ ரபா விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். எனவே இது விபத்து இல்லை என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.