6 வருடத்துக்குப் பின் திரும்பிய ராஜஸ்தான் இளைஞருக்கு பாக்.சிறையில் கொடுமை!
ஆறு வருடத்துக்குப் பின் திரும்பிய ராஜஸ்தான் இளைஞர், பாகிஸ்தான் சிறையில் கடும் சித்ரவதைகளை அனுபவித்திருப்பது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புண்டி ராம்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பரியான் லால் பீல். இவர் மகன் ஜக்ராஜ் பீல். இவர் ஆறு வருடங்களுக்கு முன், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வனக் கோயிலில் வழிபட சென்றார். வழி தவறியதில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் கைது செய்யப்பட்டார். ஜக்ராஜ் எங்கு சென்றார், எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.
பின்னர் அவர் குடும்பத்தினரின் தொடர் முயற்சி காரணமாக, கடந்த வருடம் மே மாதம் அவர் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் தகவல் தெரிய வந்தது. பாகிஸ்தானில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் சென்றதற்காக அவர் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜக்ராஜ் விடுவிக்கப்பட்டார். வாஹா எல்லையில் அவரை, மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சர்மேஷ் சர்மா, சமூக செயற்பாட்டாளர் தர்மேஷ் யாதவ், ஜக்ராஜின் சகோதரர் பாபுலால் ஆகியோர் வரவேற்று வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஜக்ராஜ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் பயத்தில் இருப்பது தெரிந்தது. வீட்டிl சகோதரனை மட்டுமே அவருக்கு அடையாளம் தெரிகிறது. ஆசையோடு அவர் அப்பா, பேச முற்பட்டபோது, ஜக்ராஜ், பேசவில்லை. அவரின் ஒரு பக்க காது அறுக்கப்பட்டிருந்தது.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்த மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சர்மேஷ் சர்மா கூறும்போது, ’’ஜக்ராஜ் சிறையில் கடும் சித்ரவதைகளை சந்தித்திருக்கிறார். அதனால்தான் இன்னும் பயத்தில்தான் இருக்கிறார். அதில் இருந்து மீண்டு வருகிறார்’’ என்றார்.
அவரது அம்மா பன்னாபாய் கூறும்போது, ‘’என் மகனை திருப்பிக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. அவர்தான் என் மகனை உயிரோடு கொண்டு வந்திருக்கிறார்’ என்றார்.