"2024 தேர்தல் முடிவு வேற மாதிரி இருக்கும்" பாஜகவின் கனவை தகர்த்த பிரசாந்த் கிஷோர்

"2024 தேர்தல் முடிவு வேற மாதிரி இருக்கும்" பாஜகவின் கனவை தகர்த்த பிரசாந்த் கிஷோர்
"2024 தேர்தல் முடிவு வேற மாதிரி இருக்கும்" பாஜகவின் கனவை தகர்த்த பிரசாந்த் கிஷோர்

தற்போதையை மாநில தேர்தல் முடிவுகளை  2024-ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன்  பிரதமர் மோடி இணைத்து பேசுவது 'தவறான சித்தரிப்பு' என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

நான்கு மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றி, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலின் திசையைக் காட்டும்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ள சூழலில்  டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பேசிய பிரதமர் மோடி, "பாஜகவின் 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை 2017 உ.பி.யின் முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்ததைப் போல , இப்போது 2022 உ.பி தேர்தல் முடிவுகளால் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தீர்மானமாகிறது” என்று தெரிவித்தார்.

எனினும், பிரதமர் மோடியின் இந்த மதிப்பீட்டை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஏற்கவில்லை. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “இந்தியாவுக்கான போர் 2024 இல் போராடி அப்போதே  முடிவு செய்யப்படுமே தவிர எந்த மாநில தேர்தல்களையும் வைத்து முடிவு செய்யப்படாது. இது பிரதமருக்கு  தெரியும், எனவே ஒரு தீர்க்கமான உளவியல் ஆதாயத்தை நிலைநாட்ட மாநில தேர்தல் முடிவுகளை முன்வைத்து உருவாக்கப்படும் புத்திசாலித்தனமான முயற்சி இது. இந்த தவறான சித்தரிப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்



இதில் சுவாரஸ்யமாக, ஜனவரி மாதம் அளித்த பேட்டியில் பேசிய பிரசாந்த் கிஷோர் "இந்தச் சுற்றில் பாஜக அனைத்திலும் வெற்றி பெற்றாலும் கூட , 2024-ல் பாஜக தோல்வியைத் தழுவுவது சாத்தியமான விஷயம்தான். 2012-ல், உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி, உத்தரகாண்ட், மணிப்பூரில் காங்கிரஸ், பஞ்சாப்பில் அகாலி தளம்  வெற்றி பெற்றது, ஆனால் இது 2014 இல் எதிரொலிக்கவில்லை" என தெரிவித்திருந்தார்

மேலும், "தென்னிந்தியாவிலும், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பலம் பெறாத நிலையில்தான் பாஜக உள்ளது, அவை கூட்டாக சுமார் 200 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. காங்கிரஸ் அல்லது கட்சிகளின் கூட்டணி தங்களை மறுசீரமைத்து, களத்தில் இறங்கினால் 250-260 தொகுதிகளில் வெல்ல முடியும்" என தெரிவித்தார்



30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் 2014ல் ஆட்சியமைத்த பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான நரேந்திர மோடியின் வியூக வகுப்பு குழுவில் பிரசாந்த் கிஷோர் இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com