"உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?" - பதாஞ்சலி நிறுவனத்தை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்

மருத்துவ சிகிச்சைகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதாஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பதஞ்சலி
பதஞ்சலிpt web

மருந்துகள் மற்றும் மாந்திரீக சிகிச்சைகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954ன் கீழ் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பதஞ்சலி நிறுவன தயாரிப்பு மருந்துகள், பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிராகவும் ஆலோபதி கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதற்கு எதிராகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக சாடிய நீதிமன்றம், குறிப்பாக, பல்வேறு நோய்களுக்கு பூரண குணம் என விளம்பரம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு இதுபோன்று மக்களை தவறாக திசைதிருப்பும் விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என்றும் மீறினால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த நவம்பர் 2023ல் எச்சரிக்கை விடுத்தது

ஆனால், நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் பதஞ்சலி நிறுவனம் நோய்களுக்கு பூரண குணம் என்ற விளம்பரத்தை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசாதுதீன் அமனுல்லா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி நிறுவனம் மக்களை திசைதிருப்பும் தவறான விளம்பரங்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகவும், அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட அலோபதி மருந்துகளை தவறாக சித்தரித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் நிரந்தர நிவாரணம் என்ற அடிப்படையில் இதுபோன்ற விளம்பரத்தை ஒளிபரப்ப உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? நிரந்தர நிவாரணம் என்றால் என்ன? கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விவகாரம் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினர்

இதையடுத்து நீதிபதிகள், உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும், மருத்துவ சிகிச்சைகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டது ஏற்க முடியாதது, எனக் கூறிய இந்த விவகாரத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

மேலும், மருந்துகள் மற்றும் மாந்திரீக சிகிச்சைகள் தொடர்பான ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் சட்டம் 1954 ன் கீழ் பதாஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com