\
fake cancer drugs sales in bangalore
fake cancer drugs sales in bangaloreai/ file photo

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

பெங்களூரில் 90க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

பெங்களூருவில் க்ருபா ஹெல்த்கேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு, 5 ஆண்டுகளாக போலி கேன்சர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விநியோகிக்கப்பட்ட அதிர்ச்சி மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காலாவதியான, மலிவு மருந்துகளை புதிய பாட்டில்களில் நிரப்பி, பிரபல நிறுவன பெயர்களில் லேபிள் ஒட்டி, 90க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு 50% தள்ளுபடியில் விற்றதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

செய்தியாளர் - ம.ஜெகன்நாத் 

கஷ்டபட்டு கடன் வாங்கி மருத்துவமனையில் சேர்ந்து Cancer-க்கான சிகிச்சை எடுத்துட்டு இரூப்பீங்க.. மருந்து உள்ள போகும்போது நம்மோட அம்மாவோ, அப்பாவோ, அக்காவோ, தம்பியோ சீக்கிறம் மீண்டு வந்துடுவாங்கன்ற நம்பிக்கையோட காத்திருப்பீங்க. ஆனா சிகிச்சைக்காக உடலுக்குள் செலுத்தப்பட்ட மருந்துகள் அனைத்தும் போலி மருந்து என்று தெரியவந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் பக்கத்தில் உள்ள பெங்களூருவில் நடந்திருக்கு.

fake drugs/ போலி மருந்துகள்
fake drugs/ போலி மருந்துகள்ai

பொதுவாகவே போலி மருந்துகள் விநியோகம் கொடுமையானது என்றால், கேன்சருக்கான மருத்துகள் போலியாக விற்கப்பட்டுள்ளது, அதிலும் 90க்கும் மேலான மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றால் இது எத்தனை பெரிய கொடிய செயலாக அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..

அதிர்ச்சி பின்னணி..

பெங்களூரில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மிகப்பெரிய போலி மருந்து விற்பனை கும்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மினர்வா சர்க்கிள் அருகே உள்ள க்ருபா ஹெல்த்கேர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அதன் உரிமையாளர் வீரேஷ் குமார் ஜெயின் கைது செய்யப்பட்டார். அங்கு போலியான உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ஐ.சி.யூ.வில் பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போலி மருந்துகளின் விநியோக சங்கிலி பெங்களூரில் உள்ள 90-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

fake drugs/ போலி மருந்துகள்
fake drugs/ போலி மருந்துகள்ai

காலாவதியான மற்றும் குறைந்த விலை மருந்துகளை புதிய பாட்டில்களில் மாற்றி அடைத்து, பிரபல மருந்து நிறுவனங்களின் பெயர்களை போலியாக பயன்படுத்தி லேபிள்கள் ஒட்டப்பட்டதாகவும், பின்னர் இந்த மருந்துகள் சுமார் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இதற்கு 15-க்கும் மேற்பட்ட மருத்துவ பிரதிநிதிகள் அடங்கிய நெட்வொர்க் உதவியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள், ஊசி மருந்துகளை நிரப்பப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் போலி மருந்து லேபிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடகா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன.

5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விநியோகம்!

இந்தசோதனையில் தான் க்ருபா ஹெல்த்கேர் உரிமையாளர் ஜெயின் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொழிலை நடத்தி வந்ததாகவும், கடந்த ஒரு ஆண்டாக இந்த கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் பிரசாந்துடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

க்ருபா ஹெல்த்கேரில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்து மாதிரிகள், ரசாயன மற்றும் தரப் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மருந்துகளின் பேட்ச் எண்கள் கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் இணையதளத்தில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

fake drugs/ போலி மருந்துகள்
fake drugs/ போலி மருந்துகள்ai

மேலும், போலி மருந்துகள் எந்தெந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு சென்றுள்ளன என்பதை கண்டறிய, விநியோகச் சங்கிலி குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் பிரசாந்த் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான போலி மருந்துகள் 90க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவம் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com