பத்தாம் வகுப்பு மாணவி கொலை - ஃபேஸ்புக் நண்பர் கைது
தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடன் பழகிய ஃபேஸ்புக் நண்பரால் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மகபூப்நகரில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் நவீன் ரெட்டி என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 27 ஆம் தேதி சங்கரயபள்ளி, குடியிருப்புக்கு அருகே உள்ள பாழடைந்த இடத்திற்கு பின்னால் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன் அந்த சிறுமியை கீழே தள்ளியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி தலையில் அடிப்பட்டு துடித்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் தலையில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி அதே இடத்தில் இறந்துள்ளார்.
இதனிடையே பெண்ணை காணவில்லை எனக்கூறி சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி நவீனுடன் சென்றது தெரியவந்தது. பின்னர் நவீனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நவீனை கைது செய்த போலீசார் சிறுமியின் உடலை கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.