சிஆர்பிஎஃப் வீரர்கள், இஸ்லாமிய வாக்குகள் குறித்த பேச்சு: மம்தா விளக்கமளிக்க உத்தரவு!

சிஆர்பிஎஃப் வீரர்கள், இஸ்லாமிய வாக்குகள் குறித்த பேச்சு: மம்தா விளக்கமளிக்க உத்தரவு!

சிஆர்பிஎஃப் வீரர்கள், இஸ்லாமிய வாக்குகள் குறித்த பேச்சு: மம்தா விளக்கமளிக்க உத்தரவு!

சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், இஸ்லாமிய வாக்குகள் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதாக எழுந்த புகார்கள் குறித்து நாளை காலை 11 மணிக்குள் பதிலளிக்குமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த ஏப்ரல் 7-ம் தேதி  மேற்குவங்க மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மத்திய பாதுகாப்பு படையினர் மக்களைக் கேட்டுக் கொண்டதாகவும், சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் மிரட்டல்களில் இருந்து வாக்காளர்கள், குறிப்பாக பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து மம்தாவின் இந்தப் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் அளித்தது.

அதற்கு முன்னதாக, இஸ்லாமியர்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் எனவும் மம்தா பேசியதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி இந்த பேச்சுக்களை பேசியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாளை காலை 11 மணிக்குள் பதில் அளிக்கக்கோரி, தேர்தல் ஆணையம் மம்தாவிற்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், டம்ஜூர் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘’தேர்தல் ஆணையத்தில் இருந்து எனக்கு எதிராக 10 நோட்டீஸ் வந்தாலும் பெரிய விஷயம் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். அதில் எந்த பிரிவும் இல்லை. பிரதமர் மோடிக்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவர் ஒவ்வொரு நாளும் மதரீதியாக மக்களை பிரித்துப் பேசி அரசியல் செய்கிறார். நந்திகிராமில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியவர்களுக்கு எதிராக எத்தனை புகார்கள் பதியப்பட்டுள்ளன?’’ என்று பேசினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com