பெட்ரோல் விலை குறைப்பு - இந்தியாவுக்கு இம்ரான் கான் பாராட்டு

பெட்ரோல் விலை குறைப்பு - இந்தியாவுக்கு இம்ரான் கான் பாராட்டு
பெட்ரோல் விலை குறைப்பு - இந்தியாவுக்கு இம்ரான் கான் பாராட்டு

பெட்ரோல் - டீசல் விலையை குறைத்ததற்காக இந்திய அரசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒன்றரை மாதங்களாக கணிசமாக உயர்ந்து வந்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே இவற்றின் விலை உயரத் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தும், டீசலின் விலை ரூ.100-ஐ கடந்தும் விற்பனையாகி வந்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து வந்தது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டன. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7-ம் குறைந்திருக்கின்றன.

இம்ரான் கான் பாராட்டு

இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'குவாட்' அமைப்பில் இந்தியா அங்கம் வகித்தபோதிலும், அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அந்த நாடு அடிபணியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை வாங்கி தங்கள் நாட்டு மக்களுக்கு விநியோகித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பெட்ரோல், டீசல் விலையை இந்தியா தற்போது கணிசமாக குறைத்திருக்கிறது.

சுதந்திரமான மற்றும் திறமையான வெளிநாட்டு கொள்கைக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்தியாவின் இந்த பாணியை தான் எனது தலைமையிலான அரசும் கடைபிடிக்க முயன்றது. ஆனால், இங்கிருந்த பல அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்காவை எதிர்க்க துணிச்சல் இல்லை. அவர்கள் அமெரிக்காவுக்கு அடிபணிய முன்வந்தனர். எனவே அமெரிக்கா என்னை நீக்கிவிட்டு அவர்களை ஆட்சியில் அமர வைத்துவிட்டது. இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com