ஞானவாபி விவகாரம் | ”முஸ்லிம்கள் கைவிடணும்; இந்துக்கள் தொடரக் கூடாது” - Ex ASI அறிவுறுத்தல்!
”முஸ்லிம்கள் ஞானவாபியை கைவிட வேண்டும்” என இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) முன்னாள் பிராந்திய இயக்குநர் கே.கே.முகமது தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாராணசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், “முஸ்லிம்கள் ஞானவாபியை கைவிட வேண்டும்” என இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) முன்னாள் பிராந்திய இயக்குநர் கே.கே.முகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், “ராம ஜென்மபூமியுடன் மதுரா மற்றும் ஞானவாபி ஆகியவை இந்து சமூகத்திற்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ளன. ஆனால், அவற்றின் முக்கியத்துவம் முஸ்லிம்களுக்கு மெக்கா மற்றும் மதீனாவைப் போன்றது. எனவே, முஸ்லிம்கள் இந்த மூன்று இடங்களையும் மனமுவந்து ஒப்படைக்க வேண்டும். இந்த மூன்றைத் தவிர, இந்து சமூகத்திலிருந்து வேறு எந்த கோரிக்கையும் வரக்கூடாது. கூடுதல் கோரிக்கைகளைப் பின்தொடர்வது பிரச்னையைத் தீர்க்காது. அது, மோதலுக்கே வழிவகுக்கும். ஒற்றுமைக்கான ஒரே தீர்வு இந்த மூன்று இடங்களையும் இந்து சமூகத்திடம் ஒப்படைப்பதுதான், மேலும் இந்துக்கள் நீண்ட இடப் பட்டியலுடன் வருவதை நிறுத்த வேண்டும். அது பிரச்னையைத் தீர்க்காது. மந்திர்-மசூதி விவாதங்கள் என்கிற பரந்த பிரச்னையில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் வரலாற்றாசிரியரின் செல்வாக்கின் காரணமாகவே இந்த சர்ச்சை வளர்ந்துள்ளது. எனினும், பெரும்பாலான முஸ்லிம்கள் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு கோயில் கட்ட அனுமதிப்பதன் மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்பினர். வரலாற்றாசிரியர் ஒரு தொல்பொருள் ஆய்வாளர் அல்ல. அகழ்வாராய்ச்சியின் எந்த கட்டத்திலும் அந்த இடத்தைப் பார்வையிட்டதில்லை. அவை, தவறான கதைகள்” எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

