மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்ட அறையில் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்டோவில் இருப்பது போன்றும், சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்ற புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் ஆங்காங்கே பரவின. இதனால் வாக்குப்திவுக்கு பின், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றனவா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்ட அறையில் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை அந்த இடத்தில் வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், “ தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் முழு பாதுகாப்புடன் சீலிடப்பட்ட ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. தேர்தல் கண்காணிப்பாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையிலேயே அந்தந்த அறைகளுக்கு இரண்டு பூட்டு போட்டு பூட்டப்பட்டது. ஒவ்வொரு ஸ்ட்ராங் ரூமிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில்தான் ஸ்ட்ராங் ரூம் அறையின் கதவுக் திறக்கப்பட்டு அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடரும்’’ என தெரிவித்துள்ளது.