PF பணத்தை எடுக்க திட்டமா? அப்போ இதை Miss செய்யாதீங்க.. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பான EPFO (Employees' Provident Fund Organisation) தனது சந்தாதாரர்களுக்கு அடிக்கடி ஏராளமான விழிப்புணர்வு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை EPFO அமைப்பு தனது எக்ஸ் வலைத்தளம் மூலம் வழங்கியுள்ளது.
அதில் ஓய்வூதியத்திற்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம்பெற விரும்புபவர்கள், தங்களது பணிக்காலத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓய்வூதியப் பங்களிப்பைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பணி முடிவடைவதற்கு முன்பாகவே பிஎஃப் கணக்கிலிருக்கும் தொகையை முழுமையாகத் திரும்பப் பெற்றால் அதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இப்படிச் செய்வதன் மூலம் தகுதியான பணிக்காலம் குறைந்து, ஓய்வுக் காலத்தில் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை உறுப்பினர்கள் இழக்க நேரிடலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க குறுகிய கால நிதித் தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுக்கும் முடிவிற்கு முன், அது தங்களின் எதிர்கால ஓய்வூதியத்தைப் பாதிக்குமா என்பதை உறுப்பினர்கள் தீர யோசிக்க வேண்டும் என்றும், வேலை மாறும்போது பிஎஃப் கணக்கை மற்றொரு நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்வதே பணித் தொடர்ச்சியைத் தக்கவைத்து, 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உதவும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் ஊழியர் எத்தனை நிறுவனங்கள் மாறினாலும் அவரது அனைத்து PF கணக்குகளையும் ஒரே UAN எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் என்னும் வசதியை EPFO வழங்கி வருகிறது. மேலும் தற்போது 58 வயதிற்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெறக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியான பிஎஃப் பங்களிப்பை EPFO கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

