இமாச்சல்: முழு கிராமத்திற்கும் கொரோனா பாசிட்டிவ்

இமாச்சல்: முழு கிராமத்திற்கும் கொரோனா பாசிட்டிவ்
இமாச்சல்: முழு கிராமத்திற்கும் கொரோனா பாசிட்டிவ்

லஹாலில் உள்ள முழு கிராமமும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் லஹால் பள்ளத்தாக்கின் தோராங் கிராமத்தில் 52 வயதான பூஷன் தாகூர் என்பவரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. மக்கள்தொகை விகிதத்தைப் பொருத்தவரை லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, மாநிலத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது.

லஹால் பள்ளத்தாக்கில் கொரோனா அதிகரித்து வருவதால் ரோஹ்தாங் சுரங்கப்பாதையின் வடக்கு போர்ட்டலுக்கு அருகிலுள்ள டெலிங் நுல்லாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. மேலும், சுற்றுலாப்பயணிகள் லஹால் எல்லைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “மணாலி-லேஹ் நெடுஞ்சாலையில் உள்ள தோராங் கிராமத்தில் வெறும் 42 பேர் மட்டுமே உள்ளனர். ஏனெனில் பெரும்பாலான மக்கள் குளிர்காலத்திற்காக குல்லுக்கு குடிபெயர்ந்துள்ளனர். கிராமத்து மக்கள் தாங்களாக முன்வந்து சில நாட்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர். அந்த 42 பேரில் 41 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களில் ஒருவரான பூஷன் என்பவர் கூறுகையில், “நான் ஒரு தனி அறையில் தங்கியிருக்கிறேன். கடந்த நான்கு நாட்களாக நானே எனக்கான உணவை சமைத்து கொள்கிறேன். பரிசோதணை முடிவுகளைப் தெரிந்து கொள்ளும் வரை நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கி இருந்தேன். ஆனால் சானிடைசர் மூலம் கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடித்தேன். மக்கள் இந்த நோயை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குளிர்காலத்தில் மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com