பெங்களூரு | ரூ.50 கோடிக்கு நாய் வாங்கிய தொழிலதிபர்.. களத்தில் குதித்த அமலாக்கத்துறை!
விலையுயர்ந்த நாய் இனங்களை வாங்கி வளர்த்து வருபவர்களில் பெங்களூருவைச் சேர்ந்த எஸ்.சதீஷும் ஒருவர். இவர், இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர், சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த நாய்களில் ஒன்றாக கருதப்படும் கேடபாம்ப் ஒகாமி என்ற ’ஓநாய்’ அரிய வகை நாய் இனத்தை வாங்க 5.7 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 50 கோடி) செலவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “இந்த நாய்க்குட்டியை வாங்க நான் 5.7 மில்லியன் டாலர்களை செலவிட்டேன். ஏனென்றால், எனக்கு நாய்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. தனித்துவமான நாய்களை சொந்தமாக வைத்து அவற்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அமெரிக்காவில் பிறந்த இந்த நாய் எட்டு மாத வயதுடையது. ஐந்து கிலோகிராம்களுக்கு மேல் எடை கொண்டது. இது ஒவ்வொரு நாளும் 3 கிலோ பச்சை இறைச்சியை சாப்பிடுகிறது. இந்த நாய்கள், அரிதானவை என்பதால் நான் அவற்றுக்காகப் பணம் செலவிடுகிறேன். மேலும், மக்கள் எப்போதும் அவற்றைப் பார்க்க ஆர்வமாக இருப்பதால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது. இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஷ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று சதீஷுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, விலை உயர்ந்த நாயை வாங்கியது உண்மை. ஆனால் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து சதீஷ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தொழில் அதிபர் சதீஷுக்கு இந்த விலை உயர்ந்த நாய் வாங்க பணம் எப்படி வந்தது என்பது பற்றிய ஆவணங்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சதீஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.