2ஜி வழக்கின் அங்கமான அமலாக்கத்துறை வழக்கின் தீர்ப்பு விவரம்
2ஜி வழக்கில் ஒரு அங்கமாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் நீதிபதி கூறிய தீர்ப்பு விவரங்களை தற்போது வெளியாகி உள்ளன.
டிபி (DB) ரியால்ட்டி நிறுவனத்திலிருந்து கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக கைமாறியது என்பதே வழக்கின் அடிப்படை என தனது தீர்ப்பில் நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி தெரிவித்துள்ளார். ஆனால் பணம் சட்டவிரோதமாக கைமாறியது விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே வழக்கு அடிப்படை அற்றதாகிவிட்டதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார். எனவே இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட தகுதியானவர்கள் என்றும் எனவே அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்பதால் டிபி (DB) ரியால்ட்டீஸ் நிறுவனத்தின் முடக்கப்பட்ட 223 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விடுவிக்கலாம் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
மேல்முறையீட்டுக்கான அவகாசம் முடிந்த பின்னரே இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி சைனி தனது தீர்ப்பில் அறிவுறுத்தியிருந்தார். விடுவிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடுகளின் போது ஆஜராவதை உறுதிப்படுத்தும் வகையில் 5 லட்சம் ரூபாய் தனி நபர் பிணைப் பத்திரம் தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் மேல்முறையீடுக்கு பின் இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதி சைனி தன் தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.