
90-களுக்கு பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அதற்கேற்ற வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை முக்கியமான பிரச்னையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 மக்களவை தேர்தலில் அளித்த வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக அரசு மறுத்து வருகிறது. நேரடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை காட்டிலும், தொழில் முனைவோர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை, நல்ல வேலைவாய்ப்புகளாக உருவாக்குவதில் சிக்கல்கள் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. அரசின் பல்வேறு ஆவணங்களை மையமாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜிடிபி சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், வளர்ச்சிக்கு தகுந்த வேலைவாய்ப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது. 1970 மற்றும் 1980களில் ஜிடிபி 3-4 சதவீதமாக இருக்கும் போது, வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவீதமக இருக்கும். ஆனால், 1990 முதல், குறிப்பாக 2000 முதல் ஜிடிபி 7 சதவீதமாக இருந்தும் வேலைவாய்ப்பு வளர்ச்சி, வெறும் ஒரு சதவீதம், சில நேரங்களில் அதற்கும் குறைவாக இருந்தது. ஆனால், 2004 முதல் 2011ம் ஆண்டு வரையில், ஜிடிபி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்க, வேலைவாய்ப்பு வளர்ச்சி 0.1 சதவீதத்திலேயே இருந்தது. 2009-2011 ஆம் ஆண்டுகளில் ஜிடிபி 7.4 சதவீதமாகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சி 1.4 சதவீதமாகவும் இருந்தது. 2011-2015 ஆண்டுகளில் ஜிடிபி 6.8 சதவீதமாகவும், வேலைவாய்ப்பு சதவீதம் 0.6 சதவீதமாகவும் இருக்கிறது.
நாட்டில் 82 சதவீதம் ஆண்கள், 92 சதவீதம் பெண்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே சம்பளவம் வாங்குகிறார்கள். ஆனால், 7வது ஊதியக் குழு அறிக்கையின்படி சராசரி ஒருமாத சம்பளம் ரூ18,000. பெரும்பாலான இந்தியர்கள், வாழ்வதற்கு தேவையான சம்பளம் இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை வழக்கமாக ‘வேலைவாய்ப்பின்மை பிரச்னை இல்லை, தகுதியின்மையும், குறைவான சம்பளமும்தான் பிரச்னை’ என கூறுவதுண்டு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தகுந்த திறந்த வேலையின்மை விகிதம் தற்போது சராசரியாக 5 சதவீதமாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் மேல்படிப்பு படித்தவர்களிடையே இது 16 சதவீதமாக இருக்கிறது. இந்த அறிக்கையின் படி நாடுமுழுவதுமே வேலைவாய்ப்பின்மை பிரச்னை உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில அதிக அளவில் இருக்கிறது.