பூரம் விழாவில், யானை ராமச்சந்திரன் பங்கேற்க ஆட்சியர் அனுமதி
கேரள யானை ராமச்சந்திரனுக்கு இன்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், யானை நலமாக இருப்பதாக கூறியதை அடுத்து, நாளை மறுநாள் நடக்கும் பூரம் விழாவில் பங்கேற்கிறது.
கேரளாவின் திருச்சூரில், பூரம் திருவிழா மே 13 மற்றும் மே 14ம் தேதிகளில் நடைபெறுகிறது. திருச்சூர் வடக்குநாதன் கோயிலில் நடைபெறும் இந்த புகழ்பெற்ற திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பு, வண்ணக்குடைகளை மாற்றும் நிகழ்ச்சி போன்றவை புகழ்பெற்றவை. இந்த விழாவில் கலந்துகொள்ளும் யானைகளை 54 வயதான சீனியர் யானையான தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் தலைமையேற்று வழிநடத்தும்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த யானை 2 பேரை மிதித்துக் கொன்றதால், அதை பூரம் விழாவில் பங்கேற்க, திருச்சூர் ஆட்சியர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த யானை வளர்ப்பவர்கள், ராமச்சந்திரன் யானை வராமல் தங்கள் யானைகளை திருவிழாவுக்கு அழைத்து வருவதில்லை என தெரிவித்தனர்.
அவர்களுடன் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, யானை ராமச்சந்திரன் 45 நிமிடம் மட்டும் பூரம் விழாவில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் கேரள அரசின் உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் யானை வளர்ப்போர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆட்சியரே முடிவெடுக்குமாறும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் யானை ராமச்சந்திரனுக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, இந்த சோதனையில் ஈடுபட்டது. பின்னர், யானை ராமச்சந்திரன் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் சரியாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், யானை ராமச்சந்திரன் பூரம் விழாவில் பங்கேற்க அனுமதியளித்தார். இதையடுத்து நாளை மறுநாள் நடக்கும் பூரம் விழாவில் யானை ராமச்சந்திரன் பங்கேற்கிறது.