யானை என்ன இந்திய குடிமகனா?: விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்..!

யானை என்ன இந்திய குடிமகனா?: விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்..!

யானை என்ன இந்திய குடிமகனா?: விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்..!
Published on

யானையை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் அதை பாசத்துடன் வளர்த்த பாகன். ஆனால் அந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வனவிலங்குகளை வளர்ப்பதற்கு டெல்லி ஏற்ற நகரம் அல்ல என்பதால் அங்கு வளர்க்கப்படும் யானைகளை பறிமுதல் செய்து, அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புமாறு கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லியின் ஷாகர்பூர் பகுதியைச் சேர்ந்த சதாம் என்பவர் லட்சுமி என்ற யானையை பராமரித்து வந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு வனத்துறையினர் யானையை அழைத்துச் சென்றபோது அளவு கடந்த பாசத்தால் தனது யானையுடன் பாகன் சதாம் தப்பிச்சென்றார்.

டெல்லி காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடினர். யமுனை நதி கரையோரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் லட்சுமி யானை கடந்த ஆண்டு செப்டம்பரில் பிடிபட்டது. அதனுடன் மறைந்து வாழ்ந்து வந்த சதாமும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி வனத்துறையினர் யானையை மீட்டு ஹரியானாவில் உள்ள முகாமில் அடைத்தனர்.

வனவிதிமுறைகளுக்கு மீறி யானையை வைத்திருந்ததாக கூறி யானை பாகன் சதாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 68 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளிவந்த அவர், தனது யானையை மீட்டுதர வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் யானை லஷ்மியை 10 ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும், தான் யானையின் உரிமையாளர் அல்ல, யானையின் நண்பன் என்பதால் யானையை தன்னிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அவர் யானை என்ன இந்திய குடிமகனா? இந்திய குடிமகன் ஒருவரை கண்டுபிடிக்க மட்டுமே ஆட்கொணர்வு மனுவைப் பயன்படுத்தமுடியும் என்று கூறியதோடு இந்த வழக்கை விசாரிக்க முடியாது என தள்ளுபடி செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com