"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை"
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், தொழில்நுட்ப ரீதியாக அதனை சேதப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும், ஹேக்கர்களால் அவற்றை முடக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் தவறானவை எனக்கூறும் மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், நெதர்லாந்து, ஜெர்மனியில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை விட இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிறந்தவை எனவும் அந்த அபிடவிட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் ஒப்புகை சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.