தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்ற நிலையை முடிவுக்கு கொண்டுவர, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா, அதாவது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.