தேர்தல் பத்திர விற்பனை: அதிக நிதியைத் தட்டித் தூக்கிய பாஜக! 9.5% பெற்ற காங்கிரஸ்!

நாடு முழுவதும் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதம் நிதி பாஜகவுக்கு கிடைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்ட்விட்டர்

அதிக நிதியைத் தட்டித் தூக்கிய பாஜக

நாடு முழுவதும் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதம் பாஜகவுக்குச் சென்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன. ரூ.12,008 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்ற நிலையில், 55% அதாவது ரூ.6,564 கோடி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

2022-23ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2,800 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.1,294 கோடி பாஜகவுக்கு கிடைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2022-23 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 6% அதாவது, வெறும் ரூ.171 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. 2023 மார்ச் வரை தேர்தல் பத்திர விற்பனை மூலம் காங்கிரஸுக்கு 9.5% அதாவது ரூ.1,135 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

தேர்தல் பத்திர திட்டம் என்பது என்ன?

தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்த நிலையில்தான் கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்தப் பத்திரங்களைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கலாம். மேலும், அந்தக் கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

பாஜக, காங்கிரஸ்
‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!

தேர்தல் பத்திரங்களை வெளியிடும் எஸ்பிஐ வங்கி

இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ வங்கியாகும். இந்தப் பத்திரங்களை, குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். இதனை ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக இந்தப் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்குக் கிடைக்கும். இதே பொதுத் தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும்.

இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும்.1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1% குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும்.

எனினும், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சுவிட்சர்லாந்து: 15 பேருடன் ரயிலைக் கடத்திய மர்ம நபர்.. 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com