வடக்கிழக்கு மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் தாமரை மீண்டும் மலர்கிறதா? முன்னணி நிலவரம்!

வடக்கிழக்கு மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் தாமரை மீண்டும் மலர்கிறதா? முன்னணி நிலவரம்!
வடக்கிழக்கு மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் தாமரை மீண்டும் மலர்கிறதா? முன்னணி நிலவரம்!

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு சூடு பிடித்திருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாத அளவுக்குதான் இருக்கிறது தேசிய அளவிலான வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்.

அதன்படி மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களின் தலா 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த மூன்று மாநிலங்களிலும் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணியே முன்னிலையில் இருக்கின்றன என தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கட்சிகள் 31 இடங்களை பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி உள்ள நிலையில், எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன என்ற காலை 10 மணி நிலவரங்களை காணலாம்.

திரிபுரா:

பாஜக மற்றும் திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி 27 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 19 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 13 இடங்களிலும், பிற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

இதில் குறிப்பிடத்தகுந்தது என்னவென்றால் இதற்கு முன்பு திரிபுராவில் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவின் கூட்டணிக்கே சாதகமாக இருந்தது. அதன்படியே தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கின்றன. இருப்பினும், காங்கிரஸ் கூட்டணியும் சற்றும் நெருக்கத்திலேயே இருப்பதால் மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்ற அரசியல் நோக்கர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

நாகாலாந்து:

மொத்தம் 60 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கே தேர்தல் நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 39 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

நாகா மக்கள் முன்னணி (NPF) 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கும் நிலையில், பிற கட்சிகள் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

ஏற்கெனவே ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக கூட்டணியே இந்த முறை மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து தேர்தல் முடிவின் முன்னிலை நிலவரங்களும் அதனையே பிரதிபலிக்கின்றன.

மேகாலயா:

60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சி (NPP) 22 இடங்களிலும், பிற கட்சிகள் 26 இடங்களிலும் முன்னிலையில் உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. கருத்துக்கணிப்பின் போது மேகாலயாவில் பெரும்பான்மை என்பது எந்த கட்சிக்கும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com