கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைப்பு
கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 223 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதிக்கு மட்டும் தற்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 154-வது தொகுதியான ராஜேஸ்வரி தொகுதியில் அடுத்தடுத்து வந்த புகாரால் தேர்தல் ஆணையம் இந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.
ராஜேஸ்வரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றதாக பரிசுப் பொருட்கள் மட்டுமில்லாமல் ஏகப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 95 லட்சம் ரூபாய் பணம், ஆயிரத்திற்கும் அதிகமான போலி வாக்காளர் அடையாள அட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மாறி மாறி புகார் அளித்தன. இந்நிலையில் இத்தொகுதியில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தொகுதியில் மட்டும் நாளைக்கு பதிலாக மே 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28-ல் பதிவாகும் வாக்குகள் மே 31-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 222 தொகுதிகளில் நாளை தேர்தல் நடத்தப்பட்டு மே 15ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.